நமக்கெல்லாம் சிரிக்கத்தான் தெரியுமே தவிர, சிரிக்க வைக்க நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்! அதுவும் சிரிப்போடு மட்டுமல்லாமல் சிந்திக்க வைக்க ஒரு சிலரால் மட்டுமே முடியும். அப்படி சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கக் கூடிய கட்டுரைகள் அடங்கிய தொகுதிகள்தான் இப்போது உங்கள் கைகளில் 'இன்று ஒரு தகவல்' எனும் நூலாக உள்ளது. அவர் பாணியில் சொல்வதானால்.. “நட்சத்திரங்கள் வெகுதொலைவில் இருக்கலாம்.. ஆனால் ஜன்னல் உங்களுக்கு அருகிலேயே உள்ளது. ஜன்னலைத் திறந்து நட்சத்திரங்களைப் பார்த்தால் அந்த அனுபவம் ஒரு வியக்கத்தக்க மாறுதலை உங்களுக்குள் உண்டு பண்ணும்”. அதைப்போலவே மனச்சாளரங் களைத் திறந்து வைத்து இதை வாசிக்கின்றபோது உங்களுக்குள் பல நல்ல மாற்றங்களை உணரலாம். இதோ ஜன்னல் திறக்கப்படுகிறது...
மனுஷனை எந்த வரைவிலக்கணத்துக்குள்ளேயும் அடக்க முடியாது. அதுதான் மனுஷனுக்கிருக்கிற பெருமை. எப்போ மனுஷனுக்கு மதிப்புன்னா அவன் மனிதத் தன்மை உள்ளவனா நடந்துக்கறப் போதுதான். மனிதநேயம் இல்லாத வாழ்க்கை மனித வாழ்க்கையே அல்ல-ங்கறதை நாம புரிஞ்சுக்கனும். உங்க செயல் ஆரோக்கியம் பெற்றதாக விளைய வேண்டுமானால் உங்கள் மனமும் உடலும் ஆரோக்கியமா இருக்கனும். உயர்கிறவர்களுக்குக் காரணமானவர்கள் ஊக்கப்படுத்துகிறவர்கள்தாம். என்னை பலர் ஊக்கப்படுத்தியதன் விளைவே ‘’இன்று ஒரு தகவல்” பல தொகுதிகளாக வெளிவரக் காரணம்.
- ----தென்கச்சி கோ.சுவாமிநாதன்