வானொலி. தொலைக்காட்சி இரண்டிலும் இவருடைய பேச்சுக்கள் தனிமுத்திரையைப் பதித்தன. தகவலாய் மட்டுமில்லாமல், அறிவுரையாய், உபதேசமாய் செய்திகளைச் சொல்லுவதில் இவருடைய பாணியை இன்றளவும் மிஞ்சியவர் இல்லை. அவருடைய பாணியிலே சொல்வதானால்.. பலபேரு உபதேசங்களைக் கேக்கறாங்க.. ஆனா அதுபடி நடக்கறதில்ல! அதனாலேதான் வீணாப்போயிடறாங்க! அதுமாதிரிதான் பலபேரு நல்ல புத்தகங்களைப் படிக்கிறாங்கனாலும் அதுல உள்ள கருத்துக்களை உள்வாங்காம விட்டுடுறாங்க! அப்படியும் இருக்கக்கூடாது.. இப்படியும் இருக்கக்கூடாது! இறுக்கமான சூழ்நிலையிலும் ஓர் மனிதன் இயல்பாக இருக்க வேண்டும். இக்காலத்தில் அது முடியுமா? சீரியஸான பிரச்சனைகள் சீரியல் போல வரும் இக்காலத்தில் இது சாத்தியமா? முடியும்! என்பதற்காகவே வருகிறது இந்த ‘இன்று ஒரு தகவல்’ புத்தகம்.
காற்றில் விடப்பட்ட தகவல்கள் கைக்கு அடக்கமான புத்தகங்களில் குடியேறியிருப்பதால் கடந்தகால முயற்சிகளை சுலபமாகக் கணக்குப் பார்க்க முடிகிறது. வகுக்கப்படுவது 'அன்பு' என்பதால் ஈவு அதிகமாகியிருக்கிறது. மகிழ்ச்சி பெருகியிருக்கிறது! உங்கள் அன்பும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.
---தென்கச்சி கோ.சுவாமிநாதன்.